விழிகளால் இழைக்கும் ஓவியம் புகைப்படம்

என் கண் வழியே புகைப்படத்துறை …..

என்னதான் நவீன தொழில்நுட்பங்கள் வாய்த்தாலும், ஒரு புகைப்படத்தின் ஆயுளைத் தீர்மானிப்பது அதன் கலைத்தன்மை தான். காலத்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்து தன்னை மேம்படுத்திக் கொள்ளும் புகைப்படக்காரனே காலம் கடந்தும் தன் படைப்போடு வாழ்கிறான்.

‘‘வாழ்க்கையைப் பாருங்கள், உலகத்தைப் பாருங்கள், தூரத்தில் உள்ள பொருட்களைப் பாருங்கள், கண்ணுக்குத் தெரியாத துகள்களையும் பாருங்கள், உங்களின் கண்களால் பிறரையும் பார்க்கச் செய்யுங்கள்!” என்று  புகைப்பட கலைக்கு சில கலைஞர்கள் இலக்கணம் சொல்கிறார்கள். எனது பார்வையில், ஒரு புகைப்படத்தை பார்த்தால் அடுத்த சில நிமிடங்கள் விழிகளை நகர்த்தக் கூடாது. அடுத்த அரை மணி நேரம் அந்த புகைப்படத்தின் பாதிப்பு மனதை விட்டு அகலக் கூடாது.


vintage-photography


அக்காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் இல்லை. தலை முழுவதும் துணியை போர்த்திக்கொண்டு தான் போட்டோ எடுக்க வேண்டும். எடுத்த புகைப்படம் சரியாக வந்துள்ளதா என்று Preview பார்க்க முடியாது. உடனே புகைப்படங்களை Delivery செய்ய இயலாது. புகைப்படம் எடுத்த பிறகு, ரோலை இருட்டு அறைக்கு எடுத்து சென்று கழுவி, Film ஐ காய வைத்து, திரும்ப பென்சிலால் திருத்த வேண்டும், பின்னர்  Film ஐ எக்ஸ்போஸ் செய்து, சில்வர் நைட்ரேட், பொட்டாசியம் சல்பேட், பொட்டாசியம் கார்போனேட், ஹைட்ரொ குய்னொன், ப்ரோமைட் போன்ற கெமிக்கல்களை சம கலவையில் எடுத்து , படத்திற்கு தேவையான அளவிற்கு கலந்து வைத்து, சரியான விதத்தில் Film ஐ  கழுவி , பின்னர் நீரில் சுத்தம் செய்து, படம் திரும்பவும் கலையாமல் இருக்க, பிக்ஸ்சர் போட வேண்டும் . இவையனைத்தும் செய்து முடித்த பின்னரே புகைப்படம் Delivery செய்யப்படும். அப்போது  Yashika 635 கேமராவும்,  Field Set கேமராவும் பயன்பாட்டில் இருந்தன. தொழில்நுட்பம் வளராத காலத்திலும், மிகச்சிறந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டது என்பது மிகவும் மனதுக்கு மகிழ்வு தரும் விடயமாகும்.

புகைப்படம் எடுக்க யாருக்குத்தான் விரும்பமிருக்காது? தொழில்நுட்பம் நம்அனைவரது கையிலும் ஒரு கேமராவை கொடுத்துவிட்டது. அது கைபேசியாக, கையடக்கக் கேமராவாக, DSLR கேமராவாக நம்மிடம் வந்து சேர்ந்து விட்டது. ஆனால், அதை எப்படிக் கையாளுவது? ஒரு அற்புத கணத்தை சரியான விதத்தில் பதிவு செய்வது எப்படி?  ஒரு  சிறப்பான புகைப்படத்தை வெறும் கருவிளால் மட்டும் படைத்திட  முடியாது.  அதைக்  கையாளும்  மனிதனின்  அறிவும் கலைத்தன்மையுமே  அப்படங்களுக்கு  உயிர்ப்பைத்  தருகின்றன. ஒரு தொழில்நுட்பத்தின்  கூறுகளை, அதன் விதிகளை, அதன் நுட்பங்களை, அதன் சாத்தியங்களை முறையாகக் கற்றுக்கொள்வதும், அதை நடைமுறையில் பரீட்சித்து, அனுபவ அறிவை வளர்ப்பதுமே ஒரு  முழுமையான கலைஞனை வளர்த்தெடுக்கும்.


yashica-635


டிஜிட்டல் கேமராவின் பாகங்கள், அது செயல்படும் விதம், அதன் அடிப்படைவிதிகள், துணைக்கருவிகள் ஆகியவற்றில் துவங்கி ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞனைப் போல ஒளியை, சூழலைப்  புரிந்துகொண்டு  ஒரு சிறந்த புகைப்படத்தைப் பதிவுசெய்வது எப்படி என்ற புரிதலும் அவசியம். ஒரு காட்சிக்கு பல கோணங்கள் உண்டு. ஒரு பூ, ஒரு கோணத்தில் சக்கரம் போலத் தெரியும். இன்னொரு கோணத்தில் நட்சத்திரமாகத் தெரியும். இன்னொரு கோணத்தில் சூரியனாகத் தெரியும். அந்த உணர்வை புகைப்படத்துக்குள் கொண்டு வரவேண்டும். அதுதான் ஆர்ட் போட்டோகிராபி (Art Photography). அண்மைக்கால டிஜிட்டல் தொழில்நுட்பம், கற்பனைத் திறனுக்கு சவாலை உருவாக்குகிறது. இயற்கை மற்றும் கற்பனை திறன் தான் இறுதியில் ஜெயிக்கிறது.

பயணங்கள் மனித உணர்வுகளை மீட்டெடுக்கின்றன என்றொரு சொற்றொடர் உண்டு. உணர்வுகள் சார்ந்து இயங்கும் படைப்பாளிகளுக்கு அது இன்னும் பயன்தரவல்லது. துவக்கநிலை புகைப்படக்காரரோ, அல்லது கலாநிபுணரோ  பகுதியாக பயணங்களைக் குழுவாக  மேற்கொள்ளலாம். பயணத்தின் பகுதிகளாக அனுபவப்பகிர்வுகள், நேரடிப்பயிற்சிகள் போன்றன அமையும். அழகான, அரிதான பயணத்தளங்களில் மனிதர்களை, நிலவமைப்பை, இயற்கையை, இரவை, நெருப்பை என ஏராள விஷயங்களை அதன் உணர்வுகளோடு படம்பிடிக்கக் கற்கலாம், படம்பிடித்து மகிழலாம், திறன் வளர்க்கலாம்.


art-photography


காட்சியின் தன்மையே புகைப்படத்தின் மேன்மையைத் தீர்மானிக்கும். தொழில்நுட்பங்கள் அதன் புறத்தன்மையை அழகூட்ட மட்டுமே பயன்படுகிறது.. அதிவேக மற்றும் மிக மெதுவான காட்சிப்பதிவுகளால் நிகழ்வின் உள் அமைப்பை பொய்க்கச் செய்து, வடிவத்தை வேறுவிதமாக வியாபித்துக் காட்டி விழிகளை வியப்பின் எல்லைக்குக் கொண்டு செல்வதே ஃபென்டாஸ்டிக் போட்டோகிராபி(Fantastic Photography).

காட்சியைப் பார்க்கும் விதம்தான் நல்ல புகைப்படத்தை உருவாக்கும். காட்சி ஒன்றுதான். ஆனால் கண்கள் எல்லோருக்கும் வேறு வேறாகவே இருக்கிறது. ஒரு புகைப்படக் கலைஞன் தன் கண்களால் மட்டுமின்றி பிறர் கண்களாலும் காட்சியைப் பார்த்துப் பழக வேண்டும். பென்டாஸ்டிக் போட்டோகிராபிக்கு நேரத்தை சரியாக கையாளத் தெரிய வேண்டும். ஒரு நல்ல புகைப்படத்தை எடுக்க நல்ல கேமரா அவசியமில்லை. அந்தப் புகைப்படத்தின் தருணங்களே அதற்கு உயிரளிக்கும். ஒரு காட்சி நகரும் வேகத்தில், நொடிக்கும் கீழான நேரத்தைப் பதிவு செய்தால் மட்டுமே உன்னதமான அனுபவத்தைத் தர முடியும். காற்றின் வேகத்துக்கு கேமரா இயங்க வேண்டும்.தொழில்நுட்பத்துடன் கற்பனைத்திறனும் ஒருங்கிணைந்து செயற்பட்டாலே   இது சாத்தியம்.


fantastic-photography


போட்டோகிராபியை ஒரு தொழிலாக அல்லாமல் ஒரு பொழுதுபோக்காக பார்க்க வேண்டும். புகழ்பெற்ற பல கலைஞர்கள் இங்கே சிறிய ஸ்டுடியோவை வைத்துக்கொண்டு வாழ்கிறார்கள். உலகளாவிய கலை அமர்வுகளில் கௌரவமான இடத்தில் தமிழர்கள் இடம் பெறுகிறார்கள். நிறைய இளைஞர்கள் புகைப்படத்துறை நோக்கி வருகிறார்கள். அது இன்னும் நம்பிக்கை அளிக்கிறது.

இன்றைய தொழில்நுட்பப் புரட்சியில் புகைப்படம் சாதாரணமாகி விட்டது. இல்லாத ஒன்றையும் உருவாக்கி விடும் அளவுக்கு அறிவியல் மயமாகி விட்டது. சிரிக்காத மனிதனை சாப்ட்வேர்(Software) சிரிக்க வைத்துவிடுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தைத் தாண்டி ஒரு புகைப்படக்கலைஞன் என்ன சாதிக்கிறான் என்பதே அவனது அடையாளம்.முதலில் காட்சிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். எல்லாவற்றிலும் ஒரு புகைப்படத்துக்குரிய காட்சிகள் இருக்கின்றன. இமை அசைவதில் தொடங்கி, ஒரு பூ மலர்வது வரை எல்லாமும் காட்சிகள்தான். அந்தக் காட்சிகளை தகுந்த நேரத்தில், தகுந்த கோணத்தில், தகுந்த மனநிலையில் காட்சிப்படுத்த வேண்டும்.


photography


புகைப்படத் துறையானது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடிய தொழில்துறையாகக் கருதப்படுகிறது.இந்தத் துறைக்கு வயது, கல்வி வரையறை என ஏதுமில்லை. அதே போல கல்வி பின்புலனும் அவசியமில்லை. இத்துறைக்கு மிக முக்கியமான நிபந்தனை ஆர்வமும் கற்றுக் கொள்ளும் மனப்பான்மையும்தான்.

புகைப்படத்துறை நாட்டில் வளர்ச்சி கண்டுள்ள துறை என்றால் மிகையில்லை. ஏனெனில், திருமணம், பிறந்தநாள் எல்லா நிகழ்ச்சிகளிலும் புகைப்படத்திற்கென தனி இடமும் செல்வாக்கும் உண்டு.அதனாலோ என்னவோ இத்துறை இளைஞர்களைக் கவர்ந்த துறையாக அமைகின்றது. இக்காலத்து இளைஞர்கள் பலரிடம் விலையுயர்ந்த புகைப்பட கருவி உண்டு. அதனை எவ்வாறு இயக்குவது என சிலர் கூகுளை நாடுகின்றனர். ஆனால், சிலர் கற்றுக் கொள்வதற்காக வாய்ப்பின்றி தவிக்கின்றனர்.

நீங்களும் உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்….

2 Comments Leave a comment

  1. Balakeeran March 15, 2018 Subscriber

    சும்மா படம் எடுத்து கொண்டு திரியிறாங்க இதான் சமூகக் கதை .இது கதை அல்ல கலை. இக் கட்டுரை அனைத்து புகைப்பட கலைஞர்களும் பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது. இது போன்ற கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி.

  2. kanagarathnam mauran March 27, 2018 Subscriber

    எல்லோராலும் இயலாத கலை.. அழகுக்கு அழகு சேர்க்கும் புகைப்படக்கலை.. சிறப்பான கட்டுரை..

Leave a Reply

%d bloggers like this: