தேசவழமை சட்டத்தின் முன் யாவரும் சமமா?

சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. இதனாலேயே இறைவனைக் கூடச் “சட்டநாதர்” என இந்துக்கள் வணங்குகின்றனர். சட்டம் ஏழைகளுக்கு ஒரு வடிவிலும் அதிகாரிகளுக்கும் பணக்காரர்களுக்கும் இன்னொரு வடிவிலும் செயற்படுகின்றது என்றார் அறிஞர் பேர்னாட் ஷா. மேலும் சட்டத்தின் வரையறைகள் முதலாளிக்கும் தொழிலாளிக்கும், தலைவனுக்கும் தொண்டனுக்கும் சமனாக அமைதல் வேண்டும் என நவீன சட்டவாட்சியின் தந்தை யு.ஏ டைசி அவர்கள் வலியுறுத்துகின்றார். மரபுகளையும் சமூக வழக்காறுகளையும் மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கும் சட்டமானது யாவருக்கும் சமமான அங்கீகாரத்தையும் சுயகௌரவத்தையும் வழங்கவேண்டிய பாரிய பொறுப்புடமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் சட்டம் பற்றிய பல அதிருப்திகள் சாதாரண சமான்ய மக்களிடையே மட்டுமன்றி பல பழுத்த சட்டநியாயாதிக்கவாதிகளிடையேயும் நிலவி வருகின்றது. “நாய் என்றால் குட்டை இருக்கும், சட்டம் என்றால் ஓட்டை இருக்கும்” என்றெல்லாம் பொது மக்களால் விமர்சிக்கப்படும் தருணத்தில் அண்மையில் பொதுநல வழக்கொன்றினை மிக அதிகமான ஏழைமக்களின் வேண்டுகோளுக்கிணங்க கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுத்து அதன் பின்னர் கருத்து வெளியிட்ட சட்டத்தரணியால் “அதிகாரத்திற்கு எதிரான வழக்குகளில் கறுப்பு அங்கியணிந்து பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கலாம் என்பது இலங்கையில் இன்னமும் பகல் கனவே” எனக் குறிப்பிட்டார். இத்தகைய நிலையில் இலங்கையின் சட்டமுறைமை தொடர்பில் சட்ட ஆராய்ச்சியாளர்களிடமும் நிபுணத்துவம் சார்ந்த சட்டப்புலமைத்துவ வாதிகளிடமும் பாரிய அதிருப்திகள் நிலவி வருகின்றமை பதிவுசெய்யப்படவேண்டியதொன்று.

Symbol Of Law And

இலங்கையின் அரசியலமைப்புத் தொடர்பிலும், நீதித்துறைக் கட்டமைப்புத் தொடர்பிலும் பல விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் போருக்குப் பின்னரான நிலைமாறு கால நீதி பருவ காலகட்டத்தில் Transitional Justice தற்போது பேசப்பட்டுக் கொண்டிருக்கும் புதிய அரசியலமைப்பின் உருவாக்கம் தொடர்பில் பல விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. அவ்விதத்தில் இலங்கைத் தீவில் நீண்டகாலமாக புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்குப் பதிலாக மாற்றுத் தீர்வு, ஒற்றையாட்சியா? சமஷ்டியாட்சியா? தேர்தல் முறைகளில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தில் மாற்றங்களைக் கொண்டு வருதல் என்பன இனியும் பேசுபொருளாக இருந்தாலும் இவை அனைத்தையும் தாண்டி சட்டத்துறைப் புலமையாளர்களால் மிகவும் நுண்மையாக ஆராயப்படும் விடயமாக தற்போதைய அரசியல் யாப்பின் 16வது சரத்தின் முதலாம் பிரிவு காணப்படுகின்றது.

சட்டரீதியான புலமைத்துவ சொல்லாடல்களைத் தவிர்த்து சாதாரணமாகக் கூறுவதென்றால் இலங்கையின் Personal Law என அழைக்கப்படுகின்ற தேசவழமைச் சட்டம் முஸ்லிம் சட்டம், கண்டியச் சட்டம் என்பனவற்றுக்கிடையில் முரண்பாடுகள் தோன்றுகின்ற போது அரசியல் யாப்பை விட Personal Law தான் மேலோங்கும். (Prevail) என அரசியல் யாப்பு குறிப்பிடுகின்றது. இது ஒருபுறமிருக்க உருவாக்கப்படப் போகின்ற அரசியல் யாப்பிலும் இதே சட்டவலிதகவு உள்வாங்கப்படுமா என்ற கேள்வி முன்வைக்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக தேசவழமைச் சட்டம் இலங்கைத் தீவில் குறிப்பாக வடபுலத்தில் பெண்ணடிமைத் தனத்தையும் சமூக வேறுபாடுகளையும் தொடர்ந்தும் இருப்புச் செய்வதற்கான விசேட பண்புகளைக் கொண்டிருப்பதனால் இவை நவீன காலணித்துவ அரசியல் சித்தாந்தங்கள் மிகவும் எழுச்சியாக பேசப்படும் இக்காலகட்டத்தில் இவை தொடர்ந்தும் தேவை தானா என்கின்ற கேள்வியை சாமானியர்கள் மத்தியில் அவிழ்த்து விடுகின்றது. ஒட்டுமொத்தத்தில் இரண்டு வினாக்களை அச்சாணியாகக்கொண்டு இவ்ஆய்வு விரிகிறது.

Harassment

வினா இலக்கம் 01 தேசவழமைச்சட்டம் என்றால் என்ன? வினா இலக்கம் 02 தேசவழமைச்சட்டத்தின் அசையாத ஆதனமுறைமை (Immovable Property) பெண்களுக்கு பாகுபாட்டு அநீதி இழைக்கிறதா? இறுதி வினாவுக்கான விடையே இக்கட்டுரையின் வேர் தேடும் சாரம்சமாகும்.

தேசவழமைச்சட்டமென்பது இலங்கையின் வடபுலத்தில் வாழும் தமிழ் மக்களின் மரபு சார் பாரம்பரிய சட்டமாகும். இலங்கைத் தீவின் வடபுலத்தமிழர்கள் ஆயிரம் ஆண்டுகளுக் மேலான தனித்துவ மரபுகளை கொண்ட இனக்குழுமம் ஆகும். இவர்களின் மரபுகளினதும் வழக்காறுகளினதும் (Customs) தொகுப்பே தேசவழமைச்சட்டமாகும். ஒல்லாந்த ஆட்சியாளர்களினால் 1707 இல் தொகுக்கப்ட்ட இச்சட்டம் 1806 முழுமையான அமுழுக்கு வந்தது. இருப்பினம் இச்சட்டம் சொத்து மற்றும் திருமணம் தொடர்பான விடயங்களில் மட்டுமே நியாயதிக்கம் (Jurisdiction) செலுத்துகிறது. சிவஞானசிங்கம் எதிர் சுந்தரலிங்கம் என்கின்ற வழக்கு தேசவழமைச்சட்டத்தின் முழுமையான பிரயோகத்தை விரிவாக விபரிக்கின்றது.

எது எப்படியாயினும் தேசவழமைச்சட்டம் பெண்களின் உரிமையை பாதுகாப்பதில் பாரிய துரோகமிழைத்துள்ளது என்பது மறுக் முடியாத உண்மை. ஈழத்தமிழர் பண்பாட்டில் பெண்களுக்கான அங்கீகாரம் பல இடங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமை போராட்டத்தில் (Self Determination) கூட பெண்களின் பங்கு அபரிமிதமானத இருப்பினும் தேசவழமைச் சட்டம் அவர்களுக்கான உரிமையை பாதுகாக்க தவறியுள்ளது. இலங்கையின் ஏனைய சட்ட முறைமைகளான கண்டியன் சட்டம் கூறும் பின்னா (Binnalaw) சட்டம், முஸ்லிம்களின் மூர் சட்டம் என்பன ஒடுக்குமுறைகளை வரையறுத்துள்ள போதும் தேசவழமை மிகப் பரந்த அளவில் பெண்களின் சொத்துருமையை குறுக்கியுள்ளது.

Jaffna Marriage and  Registration ordinance குறிப்பிடும் Section 3, மற்றும் Section 6 என்பன பெண்களின் சொத்துரிமையை குழி தோண்டி புதைக்கிறது.

பெண்ணடிமை

Section 3, தேசவழமையில் பிறந்த பெண்ணொருவர் தேசவழமைச் சட்டத்தால் ஆளப்படாத ஆணை திருமணம் செய்யும் போது தேசவழமை சார்ந்த எத்தனை உரிமைகளை இழக்கிறார் என்பது மாபெரும் மனித உரிமை மீறலாகும். Section 6 திருமணம் செய்த பெண் ஒருவர் தனது சொந்த சொத்தை விற்பது என்றால் கூட கணவனின் சம்மதம் வேண்டுமென வலியுறுத்துகிறது. தேசவழமை பெண் ஒரு அமைச்சராக இருந்து கணவன் ஒரு பிச்சைக்காரனாக இருந்தால் கூட மனைவி தனது கணவனின் சம்மதம் இல்லாமல் தானாகவே கஷ்டப்பட்டு உழைத்த சொத்தை விற்க முடியாது என்ற சட்ட ஏற்பாடு மிகவும் கொடுமையானது.

ஆகவே All are equal before law என்று தம்பட்டமடிக்கும் சட்டம், பல ஓட்டைகளை கொண்டுள்ளது. இவை யாவும் களையப்படும் வரை பெண்ணடிமைத்தனமும், பெண்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகளும் தவிர்க்க முடியாத அவலங்களாக தொடர்ந்தும் நிகழும் என்பதே நிதர்சனம்.இதனை தவிர்க்க எம்மால் என்ன செய்ய முடியும்?

Leave your comment
Comment
Name
Email