போசாக்குள்ள உணவு வகைகளை தெரிவு செய்வது எவ்வாறு?

போட்டி நிறைந்த இந்த சமூகத்தில் போசாக்குள்ள உணவுப் பழக்க வழக்கங்களிலிருந்து மக்கள் இன்றைய காலகட்டத்தில் விலகிச் செல்கின்ற தன்மை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது . இன்றைய இளம் சமுதாயம் விரைவு உணவு(fast foods) மற்றும் பானங்கள் மீது ஆர்வம் காட்டுகின்றது.  கடந்த இரண்டு தசாப்தங்களாக மக்களது உடலின் எடை மற்றும் பருமன் வேகமாக உயர்வடைந்து செல்கின்றதை அவதானிக்க முடிவது மட்டுமல்லாது தொற்றா நோய்களுக்கு ஆளாகும் அபாயம் அதிகரித்துள்ளதையும் காண முடிகின்றது.எமது நாட்டில் பல்வேறு வகையான பழங்கள், மரக்கறிகள் மற்றும் தானியங்கள்  வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியதாக இருப்பினும்இலங்கையர்களின் போசாக்கு மட்டமோ  ஏனைய நாட்டவர்களுடன் ஒப்பிடுகையில்  திருப்தி அளிக்கக்  கூடியதாக இல்லை..


national-fast-food


விற்றமின், கனியுப்பு குறைபாடு உடையவர்கள் எங்கள் நாட்டில் அதிகமாக உள்ளனர்.எங்களுடைய நாட்டில் பிறக்கும் குழந்தைகளில் 16.6% குறைந்த  நிறையுடையவர்களாக இருப்பதற்கு காரணம் கர்ப்ப காலத்தின்போது தாயின்  போசனை குறைபாடே!  குறையூட்டம் மட்டுமல்லாமல் கட்டுப்பாடு இல்லாமல் உணவுகளை உட்கொள்வதனால்  மிகையூட்டமும் அதிகரித்து வருகின்றது. உடற்பயிற்சியின்மை, சுறுசுறுப்பின்மை மற்றும் மா, சீனி, எண்ணெய் என்பவற்றை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளுதல் போன்றவை அதிக நிறை ஏற்படுவதற்கான காரணங்கள் ஆகும். அதிக நிறையினால்  நீரிழிவு , இதயநோய், உயர்குருதி அமுக்கம் போன்ற நோய்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.


fatman


போசணை சம்பந்தமான  பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கான வழி நாம் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பழக்கப்படுத்தல் ஆகும். நாம் உட்கொள்ளும் உணவுகள் ஆறு உணவுப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. எல்லா பிரிவுகளிலும் உள்ள உணவுகளைப் பெற்றுக்கொண்டு அவற்றை அவசியமான அளவுகளில் தெரிவு செய்ய  வேண்டும்.. ஆரோக்கியமான உணவுப்பழக்க வழக்கங்களாவன.

1. எமது பிரதான உணவு சோறு . இதைத் தவிர தானிய வகைகள் கிழங்கு வகைகளை நாம் தினமும் உணவுடன் சேர்த்து கொள்ளவேண்டும்.  இவை சக்தி வழங்கும் பிரதான மூலங்களாகும்.

2. இலங்கையரான எமக்கு கிடைத்த வரப்பிரசாதங்களில் ஒன்று வருடம் முழுவதும் பலவகையான  பழங்கள் மற்றும் மரக்கறிகள்இயற்கையாகவே   கிடைத்தல் ஆகும்.ஆகவே மரக்கறி மற்றும் பழங்களை ஒவ்வொரு நாளும் எடுத்துக்கொள்ளுங்கள்.


vegetables


3.  நீர், உடலினுள் நடைபெறும் வெவ்வேறு  செயற்பாடுகளுக்கு அத்தியாவசியமானதாகும். எனவே கொதித்தாறிய அல்லது வடிகட்டிய  நீரை நாளொன்றுக்கு 1.5 லீற்றர் வரை பருகுதல் அவசியமாகும். உடலின் நிறைக்கு ஏற்ப பருக வேண்டிய நீரின் அளவும்மாறுபடும் .ஆகவே சுத்தமான நீரை அருந்துங்கள்.

4. மீன், முட்டை, இறைச்சி,கருவாடு, பருப்பு வகைகளில் ஒன்றையாவது தினமும் உட்கொள்ளுங்கள். கடலை, கௌபி, பயறு ஆகிய விதைவகைகளையும், போஞ்சி, பயற்றங்காய்,  சோயா போன்ற  புரதம் அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள். இவை உடல் வளர்ச்சி, புதிய கல உருவாக்கம்,  தேய்வுற்ற இழையங்களின் பகுதியைப் புதுப்பித்தல், நோயிலிருந்து பாதுகாக்க நோய் எதிர்ப்பு பதார்த்தங்களைச் செயற்படுத்தல் போன்றவற்றுக்கு உதவும்.


nonveg


5. விற்றமின் A,D,K,E  போன்ற கொழுப்பில் கரையும் விற்றமின்கள் அகத்துறிஞ்ச எண்ணெய் மற்றும் கொழுப்பு அவசியமாக உள்ளது. மேலும் கொழுப்பு உயர் சக்தி உடையதாக இருப்பதுடன் உணவுக்கு ருசி மற்றும் உணவு உண்பதற்கான நாட்டத்தையும் ஏற்படுத்துகின்றது.எண்ணெய் மற்றும் கொழுப்பு உடலுக்கு அத்தியாவசியமான உணவுக் கூறுகளாக உள்ளது எனவே   நடுநிலை அளவான கொழுப்பை உட்கொள்ளுங்கள் .

6. பால், தயிர், வெண்ணெய் மற்றும் மோர் முதலிய பாலுற்பத்திப் பொருட்கள் பல் மற்றும் என்பு  வளர்ச்சிக்கு அவசியமான Ca, P  சத்துக்களை அதிகளவில் கொண்டிருப்பதுடன் புரதம், விற்றமின்களை  கொண்டுள்ளன. பாலாடையில் அதிகளவு விற்றமின் A உள்ளது. எனவே தினமும்  பால் அல்லது பால் உணவுகளை தினமும் உட்கொள்ளுங்கள்.


milkproduct


7. நாம்  இயந்திர வாழ்க்கையை வாழுகின்றமையால், எமது  தனித்துவமான உணவுப்பழக்கத்திலிருந்து விலகி  விடுதிகளில் சமைக்கப்பட்ட உணவுகள் , உடனடி உணவுகள்(Fast Foods) அல்லது முன்னரே தயாரிக்கப்பட்டு விற்கப்படும் பழைய உணவுகளை  உண்ணபழக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றோம். இந்த வகையான உணவுகள் பழுதடையக் கூடிய தன்மை  அதிகமாகும். எனவே வீடுகளில் தயாரிக்கப்படும் உணவுகளான சுத்தமானதும் பாதுகாப்பானதுமான உணவுகளை உட்கொள்ளுங்கள்.

8. நாம் உண்ணும் உணவானது  உடல் தொழிற்பாடு, உள வளர்ச்சிக்கும் உதவுகின்றது. மேலும் சகல உணவு வகைகளும் சிற்சில போசணைப் பொருட்களை கொண்டிருப்பினும் ஒர் உணவு சகல போசணைப் பொருட்களையும் கொண்டிருப்பதில்லை. தினமும் பல்வகையான உணவுகளை உண்பதன் மூலம்  சகல போசணைக் கூறுகளையும் பெற முடியும்.எனவே தினமும் வெவ்வெறு வகையான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.


multifood


9. பசுமையான பச்சை இலைகளில் பீற்றாகரோட்டின், பொலிபீனோல்ஸ், விட்டமின் C  மற்றும் மக்னீசியம் போன்ற தாதுப்பொருட்கள் தாராளமாக உள்ளன.இலைவகைகள் உடற்கலங்கள் சேதமாவதை தடுக்கின்றன மற்றும் வயது அதிகரிப்பால் ஏற்படும் பார்வை இழப்பை தடுப்பதிலும்  உதவுகின்றன.எனவே இலைக்கறிகளை அதிகளவில் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

போசாக்கான உணவுகளை தெரிவு செய்வதில் உங்களுக்கு ஏதும் சந்தேகம் இருப்பின் உங்கள் சந்தேகங்களை கீழுள்ள கருத்துப்பெட்டியில் பதிவிடுங்கள்…

Leave your comment
Comment
Name
Email