போதைப்பொருள் பாவனையால் சீரழியும் இளைஞர்கள்!!!

எமது நாகரிகம் வளர்ச்சி பாதையில் செல்கின்ற அதே தருணத்தில் சில தீய பழக்கங்கள்  வலிமை பெற்றுச் செல்கின்றது. மது, போதைவஸ்து மற்றும் சிகரெட் பாவனை பாடசாலை மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதை பொருளுக்கு அடிமையாகி  வருவது கவலைக்குரிய விடயமே! எமது நாட்டை பொறுத்தவரையில்  மதுவிற்காக ஏங்கி நிற்கும் நீண்ட வரிசைகளைப் பார்க்கும் போது  இப் பழக்கவழக்கங்கள் எமது கலாச்சாரத்துடன் வேரூன்றி விட்டது என்பதை நாம் அனைவரும் வேதனையுடன் அவதானிக்கும் ஒரு விடயமாகும். வன்முறை மிக்க குடும்ப, சமூக பிரச்சனைகளின் தூண்டியாக மதுபாவனை அமைந்திருப்பது என்பது புலப்படுகிறது.  ஊட்டசத்துக்கள் எதுவுமற்ற திரவத்தை உற்சாகம் தரும் பானமாக, களைப்பையும் உடல்வலியையும் தீர்க்கும் நிவாரணியாக  எண்ணுகிறார்கள்.  பெரும்பாலானோர் தமது ஆரோக்கியமான வாழ்கையையும், மகிழ்ச்சியான குடும்பங்களையும் தொலைத்து கடனாளியாகவும் நோயாளியாகவும் அலைந்து திரிகின்றனர்.  கெட்ட நண்பர்களாலும் எண்ணங்களாலும் மூடிகளில் ஆரம்பிக்கும் இவர்கள் போத்தல்களை மூடத்தெரியாது திணறுகிறார்கள். கல்லூரிகளில் போதைப்பொருள் பாவிக்காவிடின் எம்மை ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்ற பயத்திலேயே பல மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகுபவர்கள் அதிகம்.


Studentalcohol

ஒருவர் போதைவஸ்து பாவிக்காமல் இருந்தால் அவரை இச் சமூகமும் ஏளனமாக பார்க்கின்றது. மது, போதை வஸ்து மற்றும் சிகரெட்டினால்  உடலின் அனேக தொகுதிகள் பாதிப்புக்குள்ளாகின்றது. ஈரல் நிரந்தர பாதிப்பிற்குள்ளாவதால் உடலின் நஞ்சகற்றல் தொழிற்பாடு,புரதத்தொகுப்பு,  குருதியுறைதலிற்கு அவசியமான பதார்தங்களின் தொகுப்பு என்பன இடம்பெறுதல் தடைப்படுகின்றது. குடற்புண்கள், இரத்தவாந்தி, இரத்த வயிற்றுப்போக்கு, சதை அழற்சி என்பன ஏற்படலாம். உடலில் நச்சுப்பதார்தங்களின் சேர்க்கையால் இவ் நச்சுப்பதார்தங்களே உடலுறுப்புக்களில் புற்றுநோயைத் தோற்றுவிக்கலாம். பலவீனமான இதயம் மற்றும் குருதிச் சுற்றோட்டத் தொகுதியால்  உயர் குருதியழுத்தத்திற்கு உட்படுதல். மூளை மற்றும் சுற்றியல் நரம்புகளில்  நிரந்தர பாதிப்புக்கள். பலவீனமான நீர்ப்பீடனத் தொகுதியும் உடற்சுகாதாரம் குறைந்த நிலையும் பலவிதமான தொற்று நோய்களிற்கு உட்படுத்தும். இளைஞர்கள் இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி அறியாது இதனை ஒரு கலாச்சாரமாக மாற்றிக் கொண்டு வருகிறார்கள். இதனால்  மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கியிருத்தல், உளச்சோர்வுக்குள்ளாகல், நித்திரையின்மை, வலிப்பு ஏற்படுதல் போன்ற உளரீதியான பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனால் குடும்பத்தில்  துஷ்பிரயோகங்கள், குடும்பத்தில் நிம்மதியின்மை, வன்முறைகள், கடன் தொல்லை, தற்கொலை, கொலை முயற்சி, விபத்துக்கள் என்பன இடம்பெறுகின்றன.


துஷ்பிரயோகங்கள்

இப் பழக்கவழக்கங்களால் உடலுக்கு சக்தியும்  உற்சாகமும்  கிடைக்கின்றது என நினைக்கிறார்கள். நிச்சயமாக இல்லை. குடிப்பழக்கத்தால் நோயாளி ஆகின்றோம். குடியில் ஏற்படுவது தூக்கமல்ல, மூளையில் ஏற்படும்  சமநிலை குறைவு தன்மை. பெரும்பாலானோர் கள்ளு உடலுக்கு நல்லது என கூறி அதனை அருந்துகின்றனர். கள்ளு பாவனை  ஈரலில் நிரந்தர பாதிப்பினை உருவாக்கும். குடிப்பவர் குடிக்காத போது கை கால் நடுங்குமாயின் கொஞ்சம் குடிக்கலாம். இது  ஒரு பாரதூரமான நிலைமையாகும். அப்படியானவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும். ஆண்கள் தான் குடித்து சீரழிகின்றார்கள் என்றால் இன்று பெண்களும்  குடிக்கு அடிமையாக  இருக்கிறார்கள்.

உலகளாவிய ரீதியில் 14-65 வயதுக்கு இடைப்பட்ட 243 மில்லியன் மக்கள் போதைக்கு அடிமை. 80% ஆண்கள் 20% பெண்கள் ஆகும். போதைப் பொருள் பாவனையில் இலங்கையில் முதலாம் இடமாக கொழும்பு  காணப்படுகின்றது. இரண்டாவதாக கம்பஹா. மேல் மாகாணமே முதலிடத்தில் காணப்படுகின்றது. 600,000 இற்கு மேற்பட்டவர்கள் கஞ்சா பாவிப்பவர்கள். புங்குடு தீவு மாணவி வித்தியாவின் வன்புண்ர்வுக்கு காரணமும் இந்த போதைப் பொருளே. யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் வடமாகாணம் போதைப் பொருள் பாவனையால் சீரழிந்து வருகிறது .


கஞ்சா-பாவிப்பவர்கள்

மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இறுக்கமான முடிவுகளை ஏற்படுத்த வேண்டும்.  துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் முலம் விழிப்புணர்வை ஏற்படுத்தல். மது பாவனையை குறைக்க முற்படும் பொலீஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு, மது வரித் திணைக்களம், சுங்கவரித் திணைக்களங்கள் போன்றவை காணப்படுகின்றன. இன்றைய  குடியுடன்  குடும்ப வன்முறைகள் மற்றும் கலாச்சார சீரழிவுகளிலிருந்தும் எமது சமுகத்தை பாதுகாப்பதற்கு போதை வஸ்துக்களை குறைப்பதற்கான வழி வகைகளை மேற் கொள்ள வேண்டும். போதைப் பொருள் பாவனையை தடுப்பதற்கு வழிகளாக  போதைப்பொருள்பாவனை செய்வதில்லை என சபதம் எடுத்தல்.  நல்ல பல பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கைகளை வளர்த்துக் கொள்ளல், பாவனையால் வரும் வீண் விரயத்தை உணர்ந்து அதற்குரிய செலவை சேமிப்பாக மாற்றுதல்என்பனவாகும்.

‘குடி குடியை கெடுக்கும்
Electronic Cigarette

எமது இளம் சந்ததியினரின் எதிர்காலத்தை பாழாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவோரை நாம் துரோகிகளாகவே பார்க்கின்றோம். பள்ளி மாணவரின் வாழ்க்கையோடு விளையாட எவருக்கும் இடமளிக்ககூடாது. இருக்கும் சட்டத்தை கடுமையாக்குவதன் அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது. நாட்டின் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும்  சகல இடங்களிலும்  இன்று போதைப் பொருட்கள் கிடைக்கக் கூடிய நிலையையே காண முடிகிறது. நாம் தான் அதனை கண்டும் காணாதவர்கள் போல் இருப்பதன் பின்விளைவு எமது சந்ததியினரின் எதிர்காலம் சீர்குலைத்து போவதேயாகும். இதற்கு இடமளிக்க கூடாது.  தவறினால் எமது தேசத்தினதும், சமுதாயத்தினதும் எதிர்காலம் பேரழிவுக்குள் தள்ளப்பட்டதாகவே அமைந்து விடும். எனவே சிந்தித்து செயற்பட்டு இளம் சந்ததியை பாதுகாப்போமாக!!

போதைப்பொருள் பாவனை பற்றிய உங்கள் கருத்துக்களையும் பதிவிடுங்கள்…
Leave your comment
Comment
Name
Email