செம்மொழியான தமிழ் மொழி ஒரு பார்வை…

மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு ஊடகம் ஆகும்.  எனவே  மொழி முக்கியத்துவம் பெறுகின்றது. தகவல்கள் ஒரு குறிப்பிட்ட மொழியின் மூலம் பரிமாற்றப்படுகின்றன. சில மொழிகள் மிகப் பழமையானவையாகவும் இலக்கியத்தில் சிறந்து விளங்குவனவாகவும் உள்ளன. உலகில் பேசப்படுகின்ற மொழிகளில் பல எழுத்துவடிவங்கள் இல்லாமையால் அவற்றைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர முடியாமல் உள்ளன. நீண்ட கால இலக்கண, இலக்கிய பாரம்பரியத்தினைக் கொண்டதாக உள்ள மொழியானது செம்மொழி என பொதுவாக கூறப்படும். ஒரு மொழியின் சிறப்பானது அம்மொழியின் பழமை வாய்ந்த இலக்கியங்கள், கலைப்படைப்புக்கள் என்பவற்றை சான்றாக கொண்டுள்ளது.   அரபு, சீனம், ஹீப்ரூ, கிரேக்கம், இலத்தீன், பாரசீகம், சமஸ்கிருதம், தமிழ் என்னும் எட்டு மொழிகளே செம்மொழிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன. மொழிகளில் தனித்துவம் கொண்டதாக விளங்கும் தமிழ்மொழி செம்மொழியாக கருதப்படுகிறது.


தமிழ்மொழி

திராவிடம் சார்ந்த பண்பாட்டிற்கு தமிழ் மொழி ஆதாரமாக உள்ளது. இம்  மொழி 6000 ஆண்டுகள் இலக்கியப் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகின்றது. தமிழ்  தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே  எழுத்துவழக்காகவும் பேச்சுவழக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. அத்துடன் பிற மொழிகளோடு வளமாக வாழ்ந்து தான் சார்ந்த மொழிகள் பல அழிந்த பின்பு இன்றும் கூட வளத்தோடு வாழும் ஒரே மொழியாகவும் தமிழ் மொழி விளங்குகின்றது. உயிர்த்துடிப்புள்ள இலக்கியங்கள் இன்றும் தமிழ் மொழியில் உருவாக்கிய வண்ணமே உள்ளது. செம்மையான இலக்கிய வளம், விழுமியம், பொதுமை மரபு, உயரிய சிந்தனை, பாரிய சொல்வளம், வரலாற்றுப் பின்னணி, தனித்தியங்கும் மாண்பு, அழிவில்லாத வாழ்வு, காலத்திற்கேற்ற புதுமை, என பல வகையிலும் சிறப்புடைய மொழியாகத் தமிழ் மொழி திகழ்கின்றது.


Thirukural

தமிழ் மொழி யினைப் பின்பற்றிய முன்னோர்கள் பண்பாடு மிக்கவர்களாகவும் விளங்கியதால், தமிழ் இன்றும் சிறப்புமிக்க மொழியாக விளங்குகின்றது. தமிழ் மொழியிலுள்ள திருக்குறள் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்த்தை அளிப்பதாக உள்ளது. திருக்குறள் சுமார் எண்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட உலக நூலாக உள்ளது. உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தை திருக்குறள் வகிக்கிறது. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பால்களைக் கொண்டதாகவும் 1330 குறட்பாக்களை உள்ளடக்கியதாகவும் இந்நூல் அமைந்துள்ளது. தமிழ் தொன்மையான மொழி என்பதற்குரிய சான்றுகளுள் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலும் அடங்கும். இது தமிழ்மொழிக்கு அழகு சேர்ப்பதாக உள்ளது. பிற  மொழி இலக்கியங்களுக்கு ஓராயிரம் ஆண்டுக்கு முன்னர் உருவான இலக்கியத்தைக் கொண்டது தமிழ் என்பதற்கு இந்நூலும் துணை புரிகின்றது. சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம், கம்பராமாயணம்,  போன்ற காவியங்களும் தமிழ் ஒரு செம்மொழி என்பதற்கு கட்டியம் கூறுகின்றன. இளங்கோவடிகளால் பாடப்பட்ட சிலப்பதிகாரம் சங்கப் பாடலொன்றில் வரும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது.  செம்மொழி என்னும் தகுதியைத் தமிழுக்குப் பெற்றுத் தந்த இலக்கியங்கள் அனைத்தும் பல்வேறு கருத்துகளை நல்கின்றன. அத்தகைய கருத்துகள் கைவிடப் பட்டு, வெறும் மொழியாக மட்டுமே தமிழை நாம் அணுகின்றோம் என்றால், தமிழ்த்தாய் தனது செம்மையை இழந்துவிடுவாளோ என்ற அச்சம் மனதில் எழுகின்றது. பிற மொழிக்கலப்பை தமிழின் தனித்துவம் கெடாத வகையில் ஏற்று தமிழை செம்மொழியாக, சிறப்புமிக்க மொழியாக வைத்திருப்பது நமது முக்கியமான கடமையாகும்.


Tamil-Language

தமிழை உபயோகப்படுத்த யோசிக்கும் தமிழரே நீங்கள் சற்று சிந்திக்க வேண்டும். நீ முதன்மையாக கருதும் மொழி பேசும் மக்கள் வேற்று மொழிகளை கற்றாலும் பேசுவது தன் தாய் மொழியிலேயே காரணம் அவர்களுக்கு தெரியும் அவர்கள் மொழியின் அருமை. ஆனால் நம் தமிழ் மக்களோ கல்வி, அறிவியல், மருத்துவம் மேலும் பல என அனைத்திலும் சிறந்த நாம் நம் அருமை தெரியாமல் ஆடம்பரம்(fashion) என நினைத்து மற்ற மொழிகளுக்கு அடிமையாகி நம் அழகு (தமிழ்) மொழியை மறக்கின்றோம். உன் மொழிக்கு முதன்மை உரிமை கொடுக்க வேண்டியது உன் கடமை ஆனால் நீயோ உன் மொழியை தவிர மற்ற மொழிகள் அனைத்திற்கும் முன்னுரிமை குடுக்கின்றாய். ஆங்கிலம்(English) பேசினால் பெருமையும் அல்ல தமிழ் பேசினால் அவமானமும் அல்ல. உன் தாய் மொழி, நீ பேசிய முதல் வார்த்தை “அம்மா”  என்பதை மறந்து விடாதே!. நீ வாழ்வில் முன்னேற வேண்டுமா நீ முதலில் பேசிய உன் தமிழ் மொழிக்கு உரிய முதல் மரியாதை கொடுத்து வாழ்….. சிந்தித்து பார் உன் தங்கு தடையற்ற உரையாடல்கள் சிறிதும் தடங்கல் இல்லாமல் முழுமையான அர்த்தத்துடனும் முழுமையான சந்தோசத்துடனும் பேச முடியுமேயானால் அது உன் தாய் மொழியாகிய தமிழ் மொழியால் மட்டுமே முடியும். வேறு எந்தவொரு மொழியாலும் முடியாது.. புரிந்து செயல்படு….. அன்பு தமிழா!!  

தமிழ் மொழி பற்றிய உங்கள் கருத்துக்களையும் பதிவிடுங்கள் ! தமிழர்களே!!

Leave your comment
Comment
Name
Email