தை பொங்கலின் மகத்துவம்

உலகின் பழமையான  நாகரிங்களில் ஒன்று தமிழரின் நாகரிகம். உலகத்தில் முதன் முதலில் தோன்றிய மொழி தமிழ்மொழி! தோன்றியவர்கள் தமிழரே! வந்தாரை வாழவைக்கும் கலாசாரம்  நம் கலாசாரம். தங்க மணிமகுடத்தில் வைரம் பதித்தாற்போல் உயர்ந்து காணப்படுவது தமிழர்களின் பண்பாடும் கலாசாரமும் தான்.

நம் முன்னோர்கள் ஒற்றுமையை வளர்க்கும் பாலமாக பண்டிகைகளை முறைப்படுத்திக் கொண்டாடி வாழ்ந்தார்கள்..உறவுகளோடு இணங்குதல்,நன்றியுடைமை,இயற்கையைப் போற்றுதல், உழவுத் தொழிலுக்கு பெருமை சேர்த்தல், விலங்குகைளயம் நம்மைப் போன்று பாவித்து நன்றி செலுத்துதல் போன்ற நற்குணங்களின் அடையாளமாகவும் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் பரிமாணமாகவும் இந்த பண்டிகைகள் விளங்குகின்றன .

உழவர்கள்  “சேற்றில் கை வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்” யார் இவர்கள்?

“உலகம் என்னும் தேருக்கு உழவனே அச்சாணி” என்ற வள்ளுவப் பெருந்தகையின்  கூற்றுக்கு உரியவர்கள்  இவர்கள் தான் !


உழவர்கள்

இந்த உழவர் பெருமக்கள் கொண்டாடுகிற தமிழர் திருநாள்தான் தைப்பொங்கல் திருநாள் ..தமிழர் திருநாள் எனும் சொல்லாட்சியினை முதன்முதலில் பொங்கலுக்குச் சூட்டியவர் பேரறிஞர் கா.நமச்சிவாயர்! மலையகத்தில் கோ.சாரங்கபாணியார் இதனைப் பரவலாக்கினார். பொங்கல் என்பது விழாவுக்குரிய மரபுப் பெயராகும். இவ்விழா தமிழரால் தமிழிய நெறியோடு கொண்டாடப்படுவதால் தமிழர் திருநாள் என்றே அழைக்கலாம்..’எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு ‘ என்பது  தமிழரிடத்தில்  என்றும் வாழ்ந்திருக்கிறது. மனிதர்களிடம் மட்டுமில்லை விலங்குகளுக்கும் அந்நன்றியைக் காட்டியிருக்கிறார்கள்.

மனிதர்கள்  இயந்திரங்களை உருவாக்க முன் வேளாண்மை மட்டுமே சமுதாய நகர்வுக்கு  அச்சாணியாகத் திகழ்ந்திருக்கிறது. இது தமிழ்ச் சமுதாயத்திற்கு மட்டுமல்ல அனைத்து சமுதாயத்தினருக்கும்  பொருந்தும். இந்த வேளாண்மை அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானது .

விழாக்கள் அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் சரியான நேரத்தில் அமையும் போது காலத்தால் அழியாமல், அழிக்கமுடியாமல் என்றும் சமுதாயத்தைக் கட்டிக் காக்கும் அரணாக மாறி விடுகிறது.அப்படிப்பட்ட ஒரு அரண்தான் பொங்கல் விழா!இல்லங்கள், உள்ளங்கள் இணைந்து ஒரு சமுதாயமாக ஆகும்போது  விழாக்கள் உருவாகின்றன.

அறுவடை முடிந்து, செல்வம் ஏறிய, உள்ளமும் உடலும் குளிர்ந்திருக்கிற முன்பனிப் பெரும்பொழுதாகிய தைமாதத் துவக்கம் விழாக்காலமாக விதிக்கப்பட்டது எத்தனை அறிவார்ந்த பொருத்தமான செயல்!


அறுவடை

ஒளவைப்பாட்டியார் “இளவரசே வாழ்க பல்லாண்டு! “என்று வாழ்த்தவில்லை!”அரசே உன் வரப்பு உயர்க!” என்று வாழ்த்தினார். ஏனெனில்

வரப்புயர நீருயரும்!

நீருயர நெல்லுயரும்!

நெல்லுயுர குடியுயரும்!

குடியுயர கோனுயர்வான்!!

சற்றொப்ப 2000ம் ஆண்டுகளுக்கு முந்தையது சிலம்பின் காலம்! அதற்கும் முந்தியது தமிழர் இலக்கணமான தொல்காப்பியம்.

மருதநிலக் கடவுள்  இந்திரன்,மருதநிலம்  வேளாண்மையும் வேளாண்மை சார்ந்த இடமுமாகும். விவசாயத்திற்கு தேவை மழை. அந்த மழையை கொடுப்பது மேகம். அந்த மேகங்களை இயக்கும் கடவுள் இந்திரன்! ஆகவே காலமாற்றத்தில் இந்திரவிழா பொங்கல் விழாவாக உருமாற்றம் பெற்றிருக்கக்கூடும் என்ற உண்மை அனைவருக்கும் புலப்படுகிறது.

தொண்மைக்கால வரலாற்று  காலத்திலேயே சூரிய வழிபாடும்  பொங்கல் திருநாளும் மறத்தமிழரால் கொண்டாடப்பட்டு வந்த ஆதாரச் சான்றுகளைப் புராதன பாடல்கள் மூலம் நாம் அறியலாம். தமிழரால், வானியல் அறிவை வெளிப்படுத்தும் ஓர் அறிவியல் நுட்பத்தோடு கொண்டாடப்பட ஒரு பெருவிழாவாகவும்பொங்கல் விழாவை நாம் பார்க்கலாம்.


பொங்கல்

இயற்கைக்கும், இறைமைக்கும் நன்றி தெரிவிக்கின்ற  பொன் நாளாக பொங்கல் விழாவை தமிழர்கள் கொண்டாடுகின்றனர்.பொங்கல் மத விழாவாக கொள்ளப்படாது ஏனெனில் நிலம் ,நிலா ,கதிர் ,கதிரவன் ,நீர் ,நெருப்பு அனைத்தும் பொதுவானது ஆகவே இவற்றை உள்ளடக்கிக் கொண்டாடப்படும் பொங்கலும் பொதுவானதே!!

இந்தத் தமிழர் திருநாள் பொங்கல் உலகெங்கும் உள்ள தமிழர்களால் குதூகலமாகக் கொண்டாடப்படுகிறது.பொங்கல் விழா தமிழரால்  நெறியோடு கொண்டாடப்படுவதால் தமிழர் திருநாள் என்று அழைக்கலாம்.

தைமாதம் கொண்டாடப்படுவதால் “தைத் திருநாள்” என்றும் அழைக்கப்படுகிறது.நிலம் உழுது, நாற்று நட்டு, களை எடுத்து, உரமிட்டு, நீர் பாய்ச்சி, கண்ணின் மணி போல பாதுகாக்கின்ற இந்தக் காலங்களில் மடியில் காசு இருக்காது. அறுவடை முடிந்தால் தான் உழவனின்  மடியும் கனக்கும்;மனமும் நிறையும். அதனால்தான் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழியே இதனால் ஏற்பட்டது தானே!

உழைப்பை அறுவடை செய்து செல்வம் வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் பலன் பெறுவதற்கு காரணமாக இருந்த நிலம், நீர், காற்று, சூரியன் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவதட்காக  எடுக்கும் விழாதான் பொங்கல் பெருவிழா!

சூரியப் பொங்கல்….

“சுகத்தை கொடுக்கும் சூரியா போற்றி

செல்வம் வழங்கும் செங்கதிர் போற்றி

நலங்களை வழங்கும் ஞாயிறே போற்றி

ஆற்றலை வழங்கும் ஆதவா போற்றி

நவகிரகத்தின் நாயகா போற்றி.”


சூரியப்-பொங்கல்

தை மாதத்தின் முதல் நாளை உலகத்திற்கே ஒளி கொடுக்கின்ற சூரியக் கடவுளாகிய சூரியபகவானைப் போற்றி வணங்கி வழிபடும் திருநாளாக பொங்கலை கொண்டாடுகின்றனர். அதிகாலையில் குளித்து, புத்தாடை அணிந்து சுறுசுறுப்பாக வீட்டு முற்றத்தில் கோலமிட்டு ( ‘நான் 164 புள்ளி வச்சு கோலம் போட்டேன்டி போன்ற பறைசாற்றல்களும் இருக்கும்….’) பசுஞ்சாணம் கொண்டு வந்து சிறுசிறு உருண்டைகளாக்கி கோலங்களின் மேல்  படாது வைப்பார்கள்.

தோட்டத்தில்அல்லது வீட்டின் பின்புறம் உள்ள பூக்களை அதன் பூவுடலில் முத்துமுத்தாக நிற்கின்ற பனித்துளிகளை சிதறவிடாமல் மென்மையாகப் பறித்துக்கொண்டு வந்து சாண உருண்டகளில் செருகி, பச்சரிசி மாவைக் கரைத்து, வண்ணப் பொடிகளை எடுத்துக்கொண்டு, முழங்கால் வரை பாவாடையை தூக்கிச் செருகிய வண்ணம் சமையல் அறை, மாடிப்படி, மொட்டைமாடி, முற்றம் என வீட்டில் ஒரு இடம் கூட விடாமல்  ஓடி திரிந்து  தம் திறமைகளைக் காட்டும் பெண்களுக்குத் தான் என்ன ஒரு குதூகலம்!!

சூரியக் கடவுள் அந்த வருட வயல் விளைச்சலுக்குத் துணை புரிந்தமைக்கு நன்றி கூறியும், எதிர்வரும் ஆண்டில் நல்ல விளைச்சலைத் தரவும் மனமாற வேண்டி பொங்கலன்று முதல் வணக்கம் சூரியனுக்குச் செய்வார்கள்.

பொங்கலோ பொங்கல்…

சூரிய உதயத்திற்கு முன்பாகக் குளித்து புத்தாடை அணிந்து முதல் நாளே குறித்து வைத்தபடி நல்ல நேரத்தில்பொங்கல் வைக்க முனைவார்கள். வீட்டு முற்றத்தில் கல் அடுப்பு கட்டி ( கிராமங்களில்தான் இப்படி.. நகரங்களில் எல்லாம் வீட்டுக்குள் அடுப்பு பெயருக்கு ஒரு பொங்கல், சாமிபடங்களுக்கு முன் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு போங்கல் சாப்பிட்டுவிட்டு துண்டுக் கரும்பை கடிப்பதோடு பொங்கல் முடிந்து விடுகிறது…? ‘ )

பொங்கல் பானையை மையமாக வைத்து பெருக்கல் குறிபோல (*) கரும்புகளை நிறுத்தி வைத்திருப்பார்கள்.

புதுப்பானைக் கழுத்தில் இஞ்சி, மாவிலை மாலையாக வளையமிட்டிருக்கும்.
பொங்கல்-பானை

அறுவடையில் வந்த புதுநெல் அரிசியிட்டு கரும்புச் சாறில் எடுத்து செய்த வெல்லமிட்டு, பாலூற்றி, பசு நெய்விட்டு முற்றத்தில் உள்ள பானையில் பொங்கல் வைப்பார்கள். உலை கொதித்து, பொங்கலின் மணம் நுழைய சுற்றி இருப்பவர்களின் கண்கள் பொங்கல் மீதே இருக்க, பொங்கல் பொங்கி வழிய “பொங்கலோ பொங்கல் ” என்ற  பெண் குலவை சத்தத்துடன் உறவினர்களோடு கொண்டாடி மகிழ்வர்.

பொங்கல் தயாராக குடும்பமே கூடி நின்று, தலை வாழை இலை விரித்து, பூ, பழம் வைத்து, தேங்காய் உடைத்து,கற்பூரம் கொளுத்தி, கதிரவனுக்கு நைவேத்தியம்  வைத்து, பொங்கலையும் படைத்து   வணங்குவார்கள். உடம்பு பூமியில் பட விழுந்து பரிதியின் ஆசி பெறுவர். அதன் பின் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு பொங்கல் வழங்கி உண்டு மகிழ்வார்கள்!

கிராமங்களில்…

நிலைப்படிகளில் மாவிலைத் தோரணம் கட்டி, வேப்பிலை, பூ என்று கலந்த தோரணம், கிராமங்கள் திண்ணை என்று செம்மண் பட்டை, சுண்ணாம்புப் பட்டை போட்டிருக்கும். வாசல்

வீட்டுக்குள் நுழையும் போதே ஒருவித நறுமணம் நாசியைத் தடவி உள் செல்வதை உணரமுடியும்.நன்கு மெழுகப்பட்ட தரையில், சதுரமாகப் பெரிய கோலம் போட்டு, நடுவில் காவி இட்டு, அதில் அரிசி மாவினால் வடக்குப் பக்கம் சூரியனின் உருவத்தையும், தெற்குப் பக்கம் சந்திரனின் உருவத்தையும் வரைந்து ,பூஜைப் பொருட்களாக, வெற்றிலை, பாக்கு, பூக்கள், மஞ்சள், இஞ்சிக் கொத்து, கரும்பு,வாழைப்பழம்,சாம்பிராணி, கற்பூரம், பால், குங்குமம், சந்தனம், திருநீறு,தண்ணீர் இவை அனைத்தும் இடம் பெற்றிருக்கும்.

கோலம் போடுவது பெண்களினது உடலுக்கு சிறந்த பயிற்சி. குனிந்து, நிமிர்ந்து, எழுந்து,உட்கார்ந்து என ஆசனங்கள் கோலம் போடுதலில் அடங்கியுள்ளது.

கோலம் புள்ளிகளை சேர்ப்பதால் வருவதைப் போல பெண்கள் குடும்ப உறவுகளை சேர்த்து அரவணைக்க வேண்டும் என்பதே கோலம் போடுவதற்கான காரணம்.புள்ளிகளை விட்டு விட்டால் கோலம் அலங்கோலமாக ஆவது போல உறவுகளை விட்டால் சமுதாயம்  அலங்கோலமாகும்   என்ற வாழ்க்கைப் பாடத்தினை நமக்கு கற்றுத்தருகிறது.


கோலம்

சூரியன் தெரியும்படி வீட்டுத் திறந்த முற்றத்தில் பூஜை, பொங்கல் செய்வார்கள். முற்றம் இல்லாதவர்கள் வீட்டின் பூஜையறையில் பூஜை செய்வார்கள். பூஜை செய்யுமிடத்தை பூக்கள்அலங்கரித்திருக்கும்..

பொங்கல் வைக்கும் மண் பானையில் சுற்றி ஒரு விரலால் தடவிக் குங்குமப் பொட்டிட்டு பாலும் புதுத் தண்ணீரும் விட்டு சூரியன் உதிக்கிற திசையில் அடுப்பு மூட்டி பொங்கல் பானையை வைப்பார்கள். ஒரு கொதி கொதித்ததும் தயாராக வைத்துள்ள பொங்கலரிசியை  போடுவார்கள். நன்கு வெந்தபின் வெல்லம், ஏலம் உட்பட மற்ற பொங்கல் பொருட்களையும் சேர்த்து சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள்.

பொங்கலை 3 தலைவாழை இலையில் படைத்து பழங்கள், கரும்பு முதலியவற்றை கொண்டு அர்ச்சித்து, தூபதீபம் காட்டி சூரியபகவானை வணங்கி வழிபாடு செய்ய வேண்டும். பூஜையின் போது குலதெய்வத்தையும் பிரார்த்தனை செய்தல் நன்மை தரும்.

பூஜை முடிந்தபின் சைவச் சாப்பாடு விருந்துபோல நடக்கும்.  ஐந்தாறு மரக்கறி ஒன்றிரண்டு கூட்டு வகைகள் நவதானியங்கள் கலந்த குழம்பு வைத்து பப்பளம் பொரிப்பவர்களும் உண்டு. சிலர் பொங்கலன்று வெறும் வெண்பொங்கல் மட்டும் செய்வர்.

மாட்டுப் பொங்கல்…


மாட்டுப்-பொங்கல்

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற பாரதியின் கூற்றுக்கு ஏற்றவாறு ஆண்டெல்லாம் நமக்காக உழைத்து நம்மை வாழவைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் வகையில்   மாடுகளை குளிப்பாட்டி மஞ்சள், சந்தனம் இட்டு அதன் கொம்புகளுக்கு புது வண்ணம் பூசி கழுத்தில் மாலை கட்டுவர். மாடுகளுக்கு  படையலிட்டு பொங்கலும் கரும்பும் உண்ணக் கொடுத்து மகிழ்வார்கள்.இதன்போது  மாடுகளுக்கு கொம்புகளை சீவி விட்டு ,கழுத்தில் புது மணி கட்டி சுதந்திரமாக  திரிய விடுவார்கள்.

மாட்டுப் பொங்கலின்போது கிராமங்கள் தோறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழமை.

எல்லா வளமும், நலமும் பெற்று அமைதியுடன் வாழவும் சூரியக் கடவுளைப் பிரார்த்திப்போம்.

தமிழர்கள் அனைவரும் இந்த இனிய நாளை, இரட்டிப்பு சந்தோஷத்துடனும் தித்திப்புடனும் கொண்டாட வாழ்த்துவோம்.


Leave your comment
Comment
Name
Email